Thursday, September 06, 2007

அறிவிலி டிராவிட்+மாவீரன் உத்தப்பா = A remarkable Indian victory

நேற்று  நடந்த இந்தியா-இங்கிலாந்து ஒரு நாள் போட்டி பற்றி தான் சொல்கிறேன்!  ஒரு நாள் தொடர் 3-2 என்று இருந்த நிலையில், இந்தியா நேற்று வென்றால் தான், லார்ட்ஸில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டி, தொடரை நிர்ணயம் செய்யும் விதத்தில், விறுவிறுப்பாக அமையும் என்பதால், இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. 

முதலில் பேட் செய்த இங்கிலாந்து, ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்களை இழந்து (136-5, 30.2 ஓவர்கள்) தடுமாறிக் கொண்டிருந்தது. எப்போதும் போல், நம் பந்து வீச்சாளர்கள் வள்ளல்களாக மாறியதில், ரைட்டும் ஷாவும் ஜோடி சேர்ந்து 14 ஓவர்களில் 107 ரன்கள் குவித்தனர்.  ரைட் விக்கெட்டை இழந்தபோது (243-6, 44.2 ஓவர்கள்), களத்தில் நுழைந்த மாஸ்கரன்ஹாஸும் (Mascarenhas) ஷாவும் 49-வது ஓவரின் முடிவில் ஸ்கோரை 286-க்கு இட்டுச் சென்றனர். அப்போது தான் நமது கேப்டன் டிராவிட் ஒரு முட்டாள்தனமான செயலைச் செய்தார்.  ரமேஷ் பவாருக்கு ஒரு ஒவர் மிச்சமிருந்த நிலையில், பகுதி நேர பந்து வீச்சாளரான யுவராஜை இறுதி ஓவரை போட அழைத்தார் . முதல் பந்தில் ரன் இல்லை.  திடீரென்று  Mascarenhas "Massacre"nhas ஆக உருமாறி அடுத்த 5 பந்துகளில் தொடர்ந்து ஸிக்ஸர்கள் அடித்து முப்பது ரன்கள் எடுத்ததில், இங்கிலாந்தின் ஸ்கோர் 316ஐ எட்டியது.

317 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்தியா, நமது 'வயதான' தொடக்க ஆட்டக்காரர்களின் (சச்சின், கங்குலி) அபார ஆட்டத்தால் 22.2 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்த நிலையில், கங்குலி விக்கெட்டை இழந்தார். இந்த இடத்தில், தன்னம்பிக்கை இல்லாத டிராவிட் தான் களமிறங்காமல், கம்பீரை அனுப்பி சொதப்பினார். அவரும் மட்டை மேல் மட்டை போட்டதில், அடுத்த 4 ஓவர்களில் இந்தியா 6 ரன்கள் எடுத்தது!   நழுவிப் போகின்ற டெம்போவை நிலைநிறுத்த சச்சின் மட்டையை வீசப் பார்த்ததில், காலிங்வுட் அபாரமான கேட்ச் ஒன்றைப் பிடித்து, சச்சினை பெவிலியனுக்கு அனுப்பி இங்கிலாந்து அணியினரின் வயிற்றில் பாலை வார்த்தார்!

அதன் பின் அப்படி இப்படி என்று ரன்கள் வந்தாலும், இந்தியா யுவராஜ், டிராவிட், கம்பீர் ஆகியோரை இழந்தது. தேவையான ரன் ரேட்டும் கூடிக்கொண்டு போனதில், கடைசி 9.4 ஓவர்களில் இந்தியா 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலையில், 21 வயதான நமது ஹீரோ ராபின் உத்தப்பா (தொடக்க ஆட்டக்காரரான இவர் ஏழாவது ஆட்டக்காரராக) களமிறங்கினார். இதற்கு முந்தைய (இங்கிலாந்துடனான) 5 ஒரு நாள் போட்டிகளில் இவர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!  எனக்கு ஏனோ நேஷனல் ஜியாகரபி சேனலில் பார்த்த, 'சாகப்போகிறோம் என்று தெரிந்த' ஒற்றை காட்டெருமை ஐந்தாறு சிங்கங்களுடன் போராடி உயிரை விடும் காட்சி நினைவுக்கு வந்தது!

தோனியும், உத்தப்பாவும் நம்பிக்கை இழக்காமல் விளையாடினாலும், 4 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், இந்திய வெற்றிக்கு 42 ரன்கள் தேவையாக இருந்தது. ஜோன்ஸ் போட்ட 47வது ஓவரை விளாசியதில் 15 ரன்கள் கிடைத்தன.  இந்திய ரசிகர்களின் டென்ஷன் எகிறிக் கொண்டிருந்தது! 3 ஓவர்களில் 27 ரன்கள் தேவை. 23 ரன்கள் தேவை என்ற நிலையில், பிராட் பந்து வீச்சில் தோனி க்ளீன் போல்ட்!!! 

ரன் ரேட் கூடி, 2 ஓவர்களில் (12 பந்துகளில்) 23 எடுத்தால் வெற்றி!  மீண்டும் ஜோன்ஸை உத்தப்பா விளாசியதில் (பந்து மட்டையின் ஓரத்தில் பட்டு விக்கெட்கீப்பரை தாண்டிச் சென்றதில், இரண்டு பவுண்டரிகள் கிட்டியது:-)) 49வது ஓவரில் 13 ரன்கள்!  கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை.  முதல் பந்தில் 2 ரன்கள், அடுத்த பந்தில் ஜகீர் கான் ரன் அவுட்! இப்போது, 4 பந்துகளில் 8 ரன்கள் தேவை.  உத்தப்பா அசரவில்லை!  பதட்டமே இல்லாமல், உத்தப்பா முன்னோக்கி நடந்து சென்று பிராடின் மூன்றாவது பந்தை அழகாக fine leg திசையில் தூக்கி அடித்ததில் வெற்றி இலக்கு நான்காகக் (3 பந்துகளில்) குறைந்தது! ஓவரின் நான்காவது பந்தை mid-off திசையில் கம்பீரமாக drive செய்தார் உத்தப்பா, டைவ் செய்த ஃபீல்டரின் கையில் சிக்காமால், பந்து பவுண்டரியை அடைய, A REMARKABLE INDIAN VICTORY :-) 

உத்தப்பா தான் நேஷனல் ஜியாகரபி சேனலில் வரும் (சிங்கங்களிடம் மாட்டிய) காட்டெருமை அல்ல, அந்த சிங்கங்களுக்கெல்லாம் 'தல' என்பதை எனக்கு உணர்த்தியது போல் தோன்றியது:-))  வென்றதில் யுவராஜுக்கு அளவில்லா மகிழ்ச்சி, கிரவுண்டுக்குள் ஓடி வந்து உத்தப்பாவை கட்டி பிடித்து ஆனந்தக் கூத்தாடினார் (பின்ன என்னவாம், கடைசி ஓவரில் 30 ரன்கள் தாரை வார்த்ததற்கு, தோற்றிருந்தால் அவரை மற்றவர் டின் கட்டியிருப்பார்கள் அல்லவா!).  லார்ட்ஸில் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா வென்றாலும், தோற்றாலும் எனக்குக் கவலையில்லை! (சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன், ஜெயிக்கலேன்னா, அடுத்து ஒரு பதிவு போட்டு இந்திய அணியை ஒரு வாங்கு வாங்கிடுவோமில்ல;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 354 ***

18 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

முத்துகுமரன் said...

//திடீரென்று Mascarenhas "Massacre"nhas ஆக உருமாறி //

இது பாலா டச்!!

ராகுலும் சொதப்பல் முடிவுகளும் ஒட்டிப் பிறந்த இரட்டைக்குழந்தைகள். பிரிக்க முடியாது.

மும்மூர்த்திகள் போன பின்பு இந்திய அணி இருக்கப்போகும் நிலையை நினைத்து இதற்கு மாப்பு வழங்கிவிடலாம்

சிவபாலன் said...

// 'வயதான' தொடக்க ஆட்டக்காரர்களின் (சச்சின், கங்குலி) //

பாலா

இப்படி சொன்னதற்கு நம்மில் பல பேருக்கு கோபம் வந்துவிட்டது..

இந்த சுட்டியில் பாருங்க..

http://vinaiooki.blogspot.com/2007/09/blog-post_05.html

இவனுக உலகக்கோப்பையில் தோல்வியுற்றதிலிருந்தே அந்த மூன்று கிழவர்களின் (சச்சின், கங்குலி,டிராவிட்) மீது அதீத கோபத்தில் இருக்கிறேன்.

கிழவர்களை வெளியேற்றி, இளம் ரத்தங்களைப் பாச்சினால் உயிர் பிழைக்கும். இல்லை என்றால் இருக்கவே இருக்கு ஐசிஎல். அந்த போட்டியை மட்டும் பார்த்து இரசிக்க வேண்டியதுதான்.

Haranprasanna said...

:)) ட்ராவிட் கொஞ்சம் கூட யோசனையே இல்லாமல் பந்துவீச செய்கிறார். பௌலர்களே திணறிக்கொண்டிருக்கும்போது யுவராஜை போடச் சொன்னதெல்லாம் கிறுக்குத்தனம். கடைசி ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுக்காமல் இருந்தால் ஆட்டம் ஊத்தி மூடிக்கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம். உத்தப்பா இவ்வளவு நன்றாக விளையாடி இந்தியாவை வெல்ல வைப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கனித்கர் மாதிரி ஆகிவிடக்கூடாது!!! உங்கள் காட்டெருமை ஒப்புமை நல்ல ஹ்யூமர்.

enRenRum-anbudan.BALA said...

முத்துகுமரன்,
கருத்துக்கு நன்றி.

//ராகுலும் சொதப்பல் முடிவுகளும் ஒட்டிப் பிறந்த இரட்டைக்குழந்தைகள். பிரிக்க முடியாது.
//
நீங்கள் சொல்வது மிகச்சரி !
நேற்று எனக்கு என்ன டென்ஷன் தெரியுமா ?
ஜெயிச்சதாலே நிம்மதியாக தூங்க முடிந்தது :)

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

சிவபாலன்,
வருகைக்கு நன்றி.
வினையூக்கி பதிவை வாசித்து விட்டுத் தான் என் பதிவை எழுதினேன் :)

உலகக்கோப்பை சொதப்பல் என்னளவில் மன்னிக்க முடியாத ஒன்று !

enRenRum-anbudan.BALA said...

பிரசன்னா,
கருத்துக்கு நன்றி.

அந்த 'காட்டெருமை சீன்', மனசிலே அப்ப ஓடிச்சு :)

//பௌலர்களே திணறிக்கொண்டிருக்கும்போது யுவராஜை போடச் சொன்னதெல்லாம் கிறுக்குத்தனம். கடைசி ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுக்காமல் இருந்தால் ஆட்டம் ஊத்தி மூடிக்கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.
//
தாங்கள் சொல்வது போல் நடந்திருக்க வாய்ப்பு நிச்சயம் இருந்தது! என் நண்பன் ஒருவன், 2 ஓவர்களில் 23 தேவை என்ற நிலையில், டிவியை அணைத்து விட்டு தூங்கச் சென்று விட்டதாகக் கூறினான். பார்க்கவில்லையே என்று இன்று மிகவும் வருத்தப்பட்டான் :)

எ.அ.பாலா

dondu(#11168674346665545885) said...

ஆ, டெண்டுல்கர் கோல் சரியாகப் போடவில்லையா? இது என்ன கொடுமை சரவணன்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வவ்வால் said...

//இப்படி சொன்னதற்கு நம்மில் பல பேருக்கு கோபம் வந்துவிட்டது..//

சிவபாலன் என்ன இப்படி ஆகிட்டிங்க...:-))

கிழட்டு சிங்கங்கள் கர்ஜிப்பதை பாராட்டினால் கோபமா, உத்தப்பாவும் உலக கோப்பை அனைத்து மேட்ச்களிலும் ஆடினார் என்பதை எப்படி மறந்தீர்கள்( ஒன்றும் பிடுங்கவில்லை)

இளைஞர்கள் தேவை தான் ஆனால் அவர்கள் நன்றாகவும் ஆடவேண்டும், ஆடிக்கொன்று அம்மாவாசைக்கு ஒன்று என்று பேட்டில் பட்டால் பாக்கியம் படாவிட்டால் லேகியம் என்று ஆடினால் என்ன சொல்வது. கண்டிப்பாக நேற்றைய ஹீரோ உத்தப்பா தான் , ஆனால் சச்சின், கங்குலி ஓபனிங்கில் அப்படி ஆடவில்லை எனில் என்ன நடந்து இருக்கும்(இதற்கு மட்டும் ஆஸ்திரேலியா கூட இப்படி ஆட வராதுனு சொல்விங்க :-)))

நேற்றைய ஆட்டத்தில் என்று பார்க்க மாட்டிங்க அது ஏன்?

இளமையும் அனுபவமும் சேர்ந்து கலக்க வேண்டும்.

Anandha Loganathan said...

//நீங்கள் சொல்வது மிகச்சரி !
நேற்று எனக்கு என்ன டென்ஷன் தெரியுமா ?
ஜெயிச்சதாலே நிம்மதியாக தூங்க முடிந்தது :)
//

innum cricket ellam parkireergala !!! achiriyama than irukku.

Naan ellam adukku time waste panradu kidaiyaadu. Hockey madiri match result mattum therinjikuvom.

சிவபாலன் said...

வவ்வால்

நிச்சயம் உங்க மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை.. புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

என்னால் இனிமேல் அந்த கிழவர்களின் ஆட்டத்தை ரசிக்க முடியாது.. அந்த அளவுக்கு விரக்த்தி..

அதன் வெளிப்பாடே இப்படி..

தப்பா நினைச்சுக்காதீங்க..

கைப்புள்ள said...

//(பின்ன என்னவாம், கடைசி ஓவரில் 30 ரன்கள் தாரை வார்த்ததற்கு, தோற்றிருந்தால் அவரை மற்றவர் டின் கட்டியிருப்பார்கள் அல்லவா!)//


//(சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன், ஜெயிக்கலேன்னா, அடுத்து ஒரு பதிவு போட்டு இந்திய அணியை ஒரு வாங்கு வாங்கிடுவோமில்ல;-)//

ரசித்தேன். :)

நல்ல வர்ணனை. All is well that ends well.
:)

enRenRum-anbudan.BALA said...

டோ ண்டு சார்,
வாங்க! இன்னும் எத்தனை நாளைக்கு இந்த "டெண்டுல்கர் கோல்" என்ற விஷயத்தை பிடித்துக் கொண்டு தொங்கறதா உத்தேசம் ? ;-)
*********************************
வவ்வால்,
கருத்துக்கு நன்றி.

உலககோப்பை முதல் சுற்று வெளியேற்றம் மிகப் பெரிய ஏமாற்றம் என்றாலும், "வயதானவர்கள்" உயிரைக் கொடுத்து ஆடி வெற்றி பெற வழி வகுக்கும்போது (அதனால் இளைஞர்கள் உத்வேகம் அடைந்து சாதிக்கும்போது!) நிச்சயம் பாராட்டத் தான் வேண்டும்! உத்தப்பா ஒரு நாள் போட்டிகளில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்பது என் எதிர்பார்ப்பு. இந்த போட்டியில் அவர் வெளிப்படுத்திய டெம்பர்மெண்ட்டை, மனஉறுதியை, எப்போதும் தன் வசம் வைத்திருந்தால், அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது!

வவ்வால் said...

சிவபாலன் ,
உங்களுக்கு கோவம் என்றெல்லாம் சொல்லவில்லை ,ஏனெனில் நீங்கள் மற்றவர்கள் கோபப்பட்டார்கள் என சொன்னதால் அப்படி சொல்லும் எங்களுக்கு கோவமா என தான் கேட்டு இருந்தேன்,

மற்றபடி இதில் எல்லாம் என்னத்துக்கு கோவம் வரப்போகுது, உங்கள் கருத்தும் எனக்கு நன்கு புரிந்தது , ஆனாலும் சீனியர்கள் என்னதான் செய்வார்கள் , அவ்வளவு எதிர்ப்பார்ப்பு அவர்கள் மீது!

---------

எ.அ.பாலா,

உத்தப்பா போன்றவர்கள் தொடர்ந்து இதே போன்ற செயல்பாட்டினை காட்ட வேண்டும் , ஒரு நாள் கூத்தாக போய்விடக்கூடாது!

இளைஞர்களை அனுபவம் வாய்ந்தவர்களுடன் சேர்த்து விளையாட வைத்து அவர்களை வளர்க்க வேண்டும்!

enRenRum-anbudan.BALA said...

அனந்த லோகநாதன்,
வருகைக்கு நன்றி. கிரிக்கெட் நமக்கு ADDICTION-ங்க ! நாம விட்டாலும் அது நம்மை விடாதுங்க :)

சிவபாலன்,
மீள்வருகைக்கு நன்றி! வவ்வாலும் தாங்களும் செய்யும் விவாதம் எங்களுக்கு சுவாரசியமாகவே உள்ளது :) Pl. continue!

கைப்புள்ள,
வாங்க! ரொம்ப நாளாச்சு போல என் வலைப்பதிவு பக்கம் தலை காட்டி!

பாராட்டுக்கு நன்றி.

எ.அ.பாலா

நிலாரசிகன் said...

பாலா,

நம்ம தல சச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு
பெறப்போகிறார் என்று ஒரு செய்தி உலவுகிறது.

அது பத்தி ஒரு பத்தி போடுங்களேன் :)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

Dravid could afford to smile about it at the end of the day but what was the reasoning behind bowling Yuvraj at that stage? "I have never seen somebody hitting quite a bit," said Dravid.

"It looked like a bad decision [to bowl Yuvraj]. Our fast bowlers were going for 14-15 runs an over. I thought Yuvi bowled a good 48th for us. I just took a gamble with him. Credit for Dimi he cleared everything. After the first second one I thought there might be a top edge but I gave up after the third one."

நன்றி cricinfo

enRenRum-anbudan.BALA said...

வவ்வால்

மீள்வருகைக்கு நன்றி!

//நிலாரசிகன் said...
பாலா,

நம்ம தல சச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு
பெறப்போகிறார் என்று ஒரு செய்தி உலவுகிறது.

அது பத்தி ஒரு பத்தி போடுங்களேன் :)
//
:)))))

செந்தில் குமரன்
Thanks for the info!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails